Saturday 21 July 2012

காயல்பட்டினத்தில் பழமையானக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு


காயல்பட்டிணம் - அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் பழங்காலக் கல்வெட்டுக்கள்
சங்க காலத்தில் காயல்பட்டிணம் தலைசிறந்த துறைமுகப்பட்டிணமாகத் திகழ்ந்தது.கொற்கையுடன் இணைந்து முத்து,வலம்புரிச்சங்கு,பஞ்சு,இரும்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்த வரலாற்றுச்சிறப்பினை உடையது.இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள்,வெளிநாட்டுக் காசுகள்,கருப்பு சிவப்பு பானை ஓடுகள்,வெளிநாட்டுப் பீங்கான் துண்டுகள் என பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. பாண்டிநாட்டிற்கான குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.இவ்வூரில் மேற்கேப் பார்த்த சிவன் கோயிலும்  உள்ளது.துறைமுகநகரமாதலால் வைணவம், சைவம் எனப் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. மிகப் பெரிய வைணவக் கோயிலுக்குரிய கொடிமரம்,தேர்,தெப்பம் எனஅனைத்துச் சிறப்பியல்புகளுடன் திகழ்ந்த இக்கோயில் பல நூற்றாண்டுகளாக வழிபாடின்றிப்போனது. இக்கோயிலில் திருமாலின் பத்து அவதாரங்களும் கபோதகக் கூடுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.வெள்ளைக்கல்லால் இக்கோயிலின் அனைத்துப்பகுதிகளும் அமையப்பெற்றுள்ளன. உப்புக்காற்று,மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் இங்குள்ள கல்வெட்டுக்களும் பொறிந்து போயுள்ளன.தொடர்ச்சியாக அதன் பொருளை அறியமுடியவில்லை.
இடம்;அழகியமணவாளப் பெருமாள் கோயிலின் வடகிழக்கு மூலையிலுள்ள உற்சவ மேடைமேலேயுள்ள      சுவற்றில் 11 வரிகளில் உள்ளது.
காலம்; கி.பி.14 ஆம் நூற்றாண்டு
செய்தி;குட நாட்டு உதய மார்த்தாண்டன் பட்டினத்து நயினார் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலுக்குத் திருவிளக்கு ஏற்றிடவும்,நிவேதனம் செய்திடவும்,திருவிழா நடத்திடவும் வீரவளநாட்டில் வயலும் குளமும் தோட்டமும் கோயில் பூசாரியான மதுரைநம்பி என்பவருக்கு அரசன் கொடுத்த செய்தி உள்ளது.இக்கல்வெட்டு மூலம் காயல்பட்டிணம் உதயமார்த்தாண்டன்பட்டினம் என்ற பெயரில் விளங்கியது என்பதை அறிய முடிகிறது.கி.பி.1383 ஆம் ஆண்டினது சேரமன்னனான உதயமார்த்தாண்டனின் பலகைக் கல்வெட்டொன்று வீரபாண்டியன்பட்டினத்திற்கும் காயல்பட்டினத்திற்குமிடையேயுள்ள காட்டுமொகுதூம் பள்ளி அருகே உள்ள கல்வெட்டில், அங்கிருந்த பள்ளி ஒன்றை உதையமார்த்தாண்டன் பெரும்பள்ளி என்று கூறுகிறது.தற்போது அழகியமணவாளப்பெருமாள் கோயிலில் கிடைத்துள்ளக் கல்வெட்டு உதயமார்த்தாண்டனின் பெயரில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

1,2,3,.............................................................................................................
4.....நாள் குடநாட்டு உதய மாத்தாண்டன்பட்டினத்து நயினாரழகிய மணவாள
5.பெருமாள் நயினார்க்கு அரிசி கண்டு குடுத்து தளிகைக்கு
6.........ர்பித்த அமுதுபடி......பத்துக்கு...நானாழி.........................................
7...............ராஜியத்து.....................................................................................
8..............................................................................................................
9.ததுப்படிக்கு வகையாக...கொண்டுகந்த வளநாடான வீரவள நாட்டு
10....குளமும் புரவுங்கொண்டு.........மாதத்து திருவிள.............................
11.........................மதுரைகைநம்பி நடத்தும்படி கர்பித்தது......................


 

புதையல் கல்வெட்டு எண்-2
இடம்; கோயில் மகா மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச்சுவர்
காலம்; கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
செய்தி; இக்கோயிலில் புதையல் வைக்கப்பட்டச் செய்தி        உள்ளது

 1. தனந்தோன்ற வைத்துப் பு
 2. தைத்திருந்தார்கள்

கல்வெட்டு எண்-3


இடம்; மகாமண்டபத்தின் தெற்கு வெளிப்புறம் ஜெகதிப்பகுதி
காலம்; கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
செய்தி; இராசன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


 1.இராசன்


காயல்பட்டினத்தில் தொல்லியல் தடயங்கள்



காயற்பட்டினம் சங்ககாலத்தில் சோனகர்பட்டினம், பவித்திரமாணிக்கப்பட்டினம்,உதயமார்த்தாண்டன் பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.இவ்வூர் சென்ற நூற்றாண்டுவரை கடல்வழி வணிகத்தில் சிறப்புடன் விளங்கியது.இவ்வூர் கருப்புடையார்ப்பள்ளிப் பகுதியில் கடற்கரை அருகே மணற்பரப்பில் திரு பிரபு சுல்த்தான் என்பவர் தொல்லியல் தடயங்கள் சிலவற்றைச் சேகரித்துள்ளார்.அவை இடைக்கால மண் பானை ஓடுகல்,பீங்கான் ஓடுகள்,கெண்டி மூக்குகள்,சிறு அகல் விளக்குகள்,சுடுமண் நீள்மணி,சில்லுவட்டுகள், பிற்காலப்பாண்டியர் காசு ஆகியனவாகும்.4 செ.மீ.நீளமும் நடுப்பகுதியில் 1 செ.மீ. கனமும் உடையதாக உட் துளையுடன் உள்ள சுடுமண் அணிமணி குறிப்பிடத்தக்கதாகும்.பானை ஓடுகளில் ஓலைப்பதிவுகள் உள்ளன.கிடைத்துள்ளச் செப்புக்காசு 1 செ.மீ. விட்டமுடையதாகும்.ஒருபுறம் மன்னர் அமர்ந்தநிலையில்மலர் நுகரும் தோற்றம்.மன்னனின் இடதுபுறம் ‘கு’என்ற 13 ஆம் நூற்றாண்ட்டு எழுத்து வடிவம் தெரிகிறது. இதைப் பாண்டியமன்னன் குலசேகரன் காசாகக் கருதலாம்.இக்காசின் பின்புறம் உருவத்தின் உடல்பகுதி சிதைந்துள்ளது.

Wednesday 18 July 2012

ஏழடிப்பட்டம் பிராமிக் கல்வெட்டு


ஏழடிப்பட்டம் பிராமிக் கல்வெட்டு

ஏழடிப்பட்டம் செல்லும் வழியில் குகை வாசலை ஒட்டியவாறு நீண்ட பாறை கிடந்த நிலையில் உள்ளது.சிதைந்த நிலையில் உள்ள கல்வெட்டில் பின்வரும் சொற்கள் காணப்படுகின்றன.
‘’எருக்காட்டூரு கட்டுளன்’’
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.

ஏழடிப்பட்டத்திலிருந்து கீழே இறங்கி வரும்போது வழியில் இரண்டு பாறை முகடுகள் நீண்ட இடைப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு போலக் காணப்படுகிறது.பாறைகள் விழுந்ததனால் சிதந்து போன இப்பகுதியில் பாறை முகடு ஒன்றில் ஆறு வரிகளில் எழுத்துக்கள் மெலிதாகக் கீறப்பட்டுள்ளன.

1. .ப்பொய்கை மற்றத....
2. மன் சேண்ணாடன்
3. சிற் செண்ணண் கணண்
4. கம்போகல் சாத்தன்
5. பெந்தோடன் பொஇய்கை நக்கன்[செ]
6. சேம்மு மடல்
சித்தன்னவாசல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.8 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து சமணர்களின்குகை இருப்பிடமாக இருந்துள்ளது என்பது இப்புதியக் கல்வெட்டுக்களின் மூலம் அறியலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.

சித்தன்னவாசல் தமிழ் பிராமிக் கல்வெட்டு



சித்தன்னவாசல் தமிழ் பிராமிக் கல்வெட்டு

இடம்-சித்தன்னவாசல்,புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் வட்டம்.’ஏழடிப்பட்டம்’
காலம்-கி.பி.5-6 ஆம் நூற்றாண்டு
கண்டு பிடித்தவர்கள்-சு.இராசவேலு,மற்றும் முனைவர் ப.சண்முகம்,முனைவர் கா.இராஜன்,முனைவர் சு.இராசகோபால் ஆகியோர் அடங்கிய குழு
ஏழடிப்பட்டம் என்ற இடத்திற்குச்செல்லும் வழியில்,வலப்புறம் ஒரு செங்குத்துப்பாதை உள்ளது.இப்பாறையின் சுவரில் ‘’காலழி’’ என்ற ஒரு சிறு கல்வெட்டு உள்ளது.
நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.


Tuesday 17 July 2012

நெகனூர்பட்டி தமிழ் பிராமிக் கல்வெட்டு


நெகனூர்பட்டி [தென்னார்க்காடு மாவட்டம்,செஞ்சி வட்டம்] தமிழ் பிராமிக் கல்வெட்டு


இடம்-நெகனூர்பட்டி [தென்னார்க்காடு மாவட்டம்,செஞ்சி வட்டம்] மேற்கே உள்ள ‘அடுக்கண்கல்’என்ற குன்றின் கீழ் அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையின் கூறைப்பகுதியில் விளிம்பில் இக் கல்வெட்டு உள்ளது.இக்கல்வெட்டு உள்ள குகையில் சமணர்களின் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.
காலம்-கி.பி 3-4 ஆம் நூற்றாண்டு
கண்டுபிடித்தவர்-கல்வெட்டறிஞர் சு.இராசவேலு,சென்னை.
கல்வெட்டிலுள்ள செய்தி
1. பெரும்பொகய்
2. செக்கந்தி தாயியரு
3. செக்கந்தண்ணி செ
4. யிவித்த பள்ளி
பொருள்-பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாயார் செக்கந்தண்ணி என்பவள் செய்த பள்ளியை இக் கல்வெட்டுக் கூறுகிறது என்று சு.இராசவேலு கூறுகிறார்.
 நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம்-ஆவணம் இதழ்,6.


Sunday 15 July 2012

அழகன்குளம் அகழ்வாய்வில் பிராமி எழுத்துக்கள்


அழகன்குளம் அகழ்வாய்வில் பிராமி எழுத்துக்கள்


இடம்-[படம் எண்கள் 1-2-3]அழகன்குளம் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது
காலம்-கி.மு 2 முதல் 5 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்ததாகலாம்.
கண்டறிந்தோர்-தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை
கிடைத்தவைகள்-கருப்பு சிவப்புப் பானையோடுகள் ரூலடெட் பானையோடுகள் கிடைத்துள்ளன.
[படம் எண்-1] பானையோட்டில் ‘’தானிய துவரைமா[ன்]’’
என்று பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
[படம் எண்-2] பானையோட்டில் எகிப்தியப் பிரமிடுகளில் காணப்படும் ஓவிய உருவங்களைப் போன்ற இரு பெண்ணுருவங்கள் ஒருவரைஒருவர் பார்த்தவண்ணம் நிற்கின்றனர்.ஒருத்தி நீண்ட குடுவை ஒன்றினை ஏந்தியவாறும்,மற்றொருத்தி தன்னுடைய இடக்கரத்தில் விசிறி அல்லது கண்ணாடி ஒன்றினை ஏந்தியவாரும் [படம் எண்-3] பானையோட்டில் பாய்மரத்துடன் கூடிய கப்பல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
இடம்-[படம் எண்-4]  பூம்புகார் அகழ்வாய்வில் கிடைத்தது
பூம்புகார் அகழ்வாய்வில் கிடைத்தப் பானையோட்டில் பிராமி எழுத்தில் பிராகிருதி மொழியில் எழுதப்பட்டுள்ளது.’’[அ]ஹாப கே3தரோ’’ என்றிருக்கலாமென தொல்லியலறிஞர் நடன.காசிநாதன் கருதுகிறார்.நன்றி-தமிழகத்தொல்லியல் கழகம் ஆவணம்,இதழ்;9
Saturday 14 July 2012

அழகிய மணவாளப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,காயல்பட்டிணம்,தூத்துக்குடி மாவட்டம்.

இராகு கேது தோசம் போக்கும் அழகியமணவாளப்பெருமாள் சுவாமி திருக்கோயில் ,காயல்பட்டிணம்

அருள்மிகு அழகியமணவாளப்பெருமாள் சுவாமி தேவியருடன் காட்சி தருகிறார்

Wednesday 11 July 2012

எகிப்து நாட்டில் கிடைத்துள்ள தமிழில் எழுதிய தாழி


 
    எகிப்து நாட்டில் கிடைத்துள்ள தமிழில் எழுதிய தாழி 
கி.பி 60 இலிருந்து-கி.பி 70 ஆண்டளவிலான தமிழில் எழுதிய தாழி எகிப்து நாட்டில் கிடைத்துள்ளது.எகிப்து நாட்டில் செங்கடல் கரையில் ரோமானியர் காலத்தில் பெரெனிகெ என்ற பழந்துறைமுகம் இருந்தது.1994-95 இல் அங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த மதுச்சாடிச் துண்டில் தமிழ் மொழியில்
தமிழ்-பிராமி எழுத்துக்களிலான சொற்கள் கண்டறியப்பட்டன.மதுச்சாடி துண்டின் நீளம் 19.2 செ.மீ.,அகலம் 14.3 செ.மீ ஆகும் உடன் ரோமானிய நாணயமும் கிடைத்துள்ளன.இவ்வகழ்வாய்வினை டெலாவேர்
பல்கலைக் கழகமும்,லெய்டன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின. இவகழ்வாய்வின் முதல்வர் பேரசிரியர் ஸ்டீவன் ஸைட்பாதம், அறிஞர் அய்ராவதம் மகாதேவன் அவர்களுக்கு சாடியின் புகைப்படத்தை
அனுப்பிதால் அதனை ஆய்ந்து பிராமி எழுத்துக்களைக் கண்டறிந்து தமிழுக்குப் பெருமைச்சேர்த்தார்.
அவற்றிலுள்ள சொற்கள்
’’கொற பூமான்’’
இதனைக் ‘’ கொ[ற்]ற[ப்]பூமான்’’ என வாசிக்க வேண்டும் என்று அறிஞர் அய்ராவதம் மகாதேவன்கூறுகிறார்.தமிழ் கல்வெட்டுக்களில் பெரிதும் மெய்யெழுத்துக்கள் இரட்டித்து எழுதுவதில்லை. றகர,னகரங்களைப் பயன்படுத்தி இச்சொற்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன.சங்க காலத்தில் தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் கடல் வணிகம் செழித்திருந்தது என்பதற்கு இது ஆதாரமாகும்.
              கருத்திற்கான நன்றி-தமிழகத் தொல்லியல் கழகம் ஆவணம்-இதழ் ,1998